கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த மாநிலத்தின் குடகு, மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அடுத்த இரு நாட்களுக்கு குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குடகு,மாண்டியா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 17 ஆம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 885 கன அடி வீதமும், கபினியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதமும், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் இப்போது கிருஷ்ணராஜ சாகரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.80 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் அந்த அணையில் இப்போது 90.73 அடிக்கு தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1949 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2908 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 84 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் கபினி அணியில் இப்போது 69 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1315 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் வினாடிக்கு 3408 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது. இந்த தண்ணீர் அடுத்த இரு நாட்களில் தமிழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அடுத்து வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
WhatsApp us