தெரசா மேவை தொடர்ந்து பிரதமர் பொறுப்புக்கு வந்த போரிஸ் ஜான்சன், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தம் இல்லாமலோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரெக்சிட் செயல்திட்டத்திற்கான புதிய உடன்பாடு பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் இடையே எட்டப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் வசம் முழுக்கட்டுப்பாடும் வரும் வகையில் சிறந்த ஒப்பந்தமாக எட்டப்பட்டுள்ளது என்றும், இந்த செயல்திட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஒப்புதல் தரவேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு இடையே, பிரெக்சிட் புதிய உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், அதற்கு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். புதிய செயல் திட்டத்தை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எத்தனை பேர் ஏற்பார்கள் என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, ஆளுங்கூட்டணியில் உள்ள வடக்கு அயர்லாந்தின் டியூபி கட்சி அதை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.