கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்ரீநகரில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். ஜம்மு-காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் ட்ராஸ் (Dras) நகரில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக, ராம்நாத் கோவிந்த் ட்ராஸ் நகருக்கு செல்வது ரத்து செய்யப்பட்டது. ஸ்ரீநகரில் படாமி பாக் கன்டோன்மென்ட்டில் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், அங்குள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கார்கில் போரில் வீரர்கள் வெளிப்படுத்திய தீரத்தை நாடு பெருமையுடன் நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
இதேபோல, ஜம்மு-காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் ட்ராஸ் (Dras) நகரில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில், ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகிய மூவரும் அஞ்சலி செலுத்தினர்.
முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், எல்லைகளை பாதுகாத்து நிற்கும் வீரர்கள், எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும் அதில் வெற்றியை ஈட்டுவார்கள் எனக் குறிப்பிட்டார். ராணுவ தளவாடங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கார்கில் வெற்றி தினத்தில் பாகிஸ்தானுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, குருட்டு சாகசங்களில் மீண்டும் இறங்க நினைத்தால் மறுபடியும் மிகமோசமாக மூக்குடைபட நேரும் என எச்சரித்தார். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் ராணுவத் தளபதி தெரிவித்தார்.
WhatsApp us