கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜசாகருக்கு வினாடிக்கு 7047 கன வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6011 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போன்று கபினி அணைக்கு வினாடிக்கு 10656 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆறு ஓடி வரும் வழி நெடுகிலும் பெய்யும் மழையாலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு வினாடிக்கு 8500 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக பரிசல் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7200 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், அடிபாலாறு, பண்ணவாரி வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றின் தரையில் காய்ந்து, உலர்ந்து போன சருகுகள், குப்பை கூளங்கள் எல்லாம் அடித்து வரப்படுகின்றன. இதனால் தண்ணீர் நுரை கலந்து காணப்படுகிறது.
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. நேற்று 41.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 42.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7200 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட திறக்கும் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. இதனால் செட்டிபட்டி, கோட்டையூர், பன்ணவாரிபரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீனவர்கள் தங்கள் முகாம்களை மேடான பகுதிக்கு மாற்றினர்.
WhatsApp us