திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நாள்தோறும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரிய சேஷம், சிறிய சேஷம், அன்ன, கற்பக விருட்ச, கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என 8 நாட்களும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் வீதி உலா வந்தார். அப்போது கோவிந்த கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் மலையப்பசாமியை தரிசனம் செய்தனர். வீதி உலாக்களின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 4ம் தேதியும், தேரோட்டம் 7ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று அதிகாலை, உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் வராக சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். வராக சுவாமி கோவில் எதிரே மலையப்ப சுவாமிக்கும், தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து ஏழுமலையான் கோவில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தெப்பகுளத்தை சுற்றியிருந்த பக்தர்கள் புனித நீராடினர். இதையடுத்து 9ம் நாளான இன்று பிரம்மோற்சவத்தை காணவந்த தேவதைகளை வழியனுப்பி வைக்கும் விதமாக கொடி இறக்கம் நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஆகம விதிப்படி வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி இறக்கப்படுகிறது
WhatsApp us