288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல் தேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாயின. 165 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 260 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. சிவசேனா கட்சி 124 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 56 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது.
மொத்தத்தில் பா.ஜ.க. சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளிலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இந்த கூட்டணி 98 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா ஒரு இடத்திலும், சமாஜ்வாடி கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வோர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே 67 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பங்கஜ முன்டே உள்பட அமைச்சர்கள் 8 பேர் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளனர்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், கடந்த தேர்தலை விட குறைவான இடத்தில் பாஜக வெற்றி பெற்ற போதிலும், தற்போது பாஜக பெற்ற வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
சுயேச்சைகள் உள்பட புதிய எம்எல்ஏக்கள் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாஜகவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சதாரா மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பார்லி சட்டமன்ற தொகுதி தேர்தலில் பாஜக தோற்றது அதிர்ச்சி அளிப்பதாகவும் இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் பத்னாவிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக ஆட்சி அமைக்கும்போது அதிகாரத்தில் சம பங்கு தர கோருவோம் என தெரிவித்தார். ஏற்கனவே இது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்றும், அதனை வலியுறுத்தும் நேரம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.