90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கின. கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாரதிய ஜனதா கட்சி 75 தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டு இருந்த நிலையில், 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 46 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தள் கட்சி, கோபால் கன்டாவின் ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் 4 பேர் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் தேர்தலில் வெற்றி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் ஹரியானாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை நிர்ணயம் செய்வதில் ஜனநாயக் ஜனதா கட்சியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்னால் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் வேட்பாளர் தர்லோச்சன் சிங்கை விட 45 ஆயிரத்து 188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஹரியானா லோகித் கட்சி தலைவர் ((கோபால் கன்டா )) உள்பட 2 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
