இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார்.
ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, துணைத் தலைவர் பதவிக்கு உத்தரகாண்டின் மஹிம் வர்மா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல், இணைச் செயலர் பதவிக்கு கேரளத்தின் ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கங்குலி பதவியேற்கிறார். அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்.
