விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர், சாத்தானந்தனல், நெகனூர், நாட்டார்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதே போன்று மழை நீடித்தால் விரைவில் நீர் நிலைகள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கனமழை காரணமாக வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. அதைப்போன்று அப்பகுதியில் உள்ள மரக்கடை மீது மரம் ஒன்று விழுந்து கடை முற்றிலும் சேதமாகியது.
இதனிடையே, மத்திய மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், இதனால் 24 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
