சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த நிலையில், கோயம்பேடு,வடபழனி,கிண்டி, தாம்பரம்,பாரிமுனை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வாகன ஓட்டிகளும், பணிக்கு செல்வோரும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் விருத்தாசலம் பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. விவசாயத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, தாமரைக்குளம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை – நாகைக்கு இடையே பூமியில் இருந்து 3 முதல் நான்கு கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சங்கமம் நிலவுவதாகவும், தமிழகத்தின் தெற்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் வரும் காற்று சங்கமிப்பதால், மழைக்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
WhatsApp us