தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்த தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பித்து நேற்று அரசாணை வெளியிட்டது. இதன்படி, மாநகராட்சி மேயர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தலைவர்கள் இனிமேல் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதாவது, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளின் கவுன்சிலர்கள், தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவர்.
பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயர்களையும், பேரூராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அந்தந்த அமைப்புகளின் தலைவர்களையும் தேர்வு செய்வர். மேயர்கள், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்கள் இனிமேல் மக்களால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து, வழக்கறிஞர் நீலமேகம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் இன்று முறையீடு செய்தார்.
கவுன்சிலர்களை கொண்டு மாநகராட்சி மேயர்களையும், நகராட்சி தலைவர்களையும் தேர்வு செய்திட ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிரானது என முறையிட்டார். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்கள், மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உள்ளதாக வழக்கறிஞர் நீலமேகம் தெரிவித்தார். இதைக்கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால், நாளை விசாரிக்கப்படும் எனக் கூறினர்.