அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், அரியானா லோகித், அகில இந்திய லோக் தளம் ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும், சுயேட்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அறுதிப் பெரும்பான்மைக்கு 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சுயேட்சைகள் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வும் , ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளன என்றார். பா.ஜ.கவுக்கு முதலமைச்சர் பதவியும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படுமென அவர் கூறினார்.
இதனிடையே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சண்டிகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக கட்டார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன்பின்னர், மாலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
