288 தொகுதிகளுக்கு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய உடன்பாட்டின்படி இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன.
இருப்பினும் ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று கூறியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியை மாறி மாறி வகிப்பதற்கான ஃபார்முலாவை பாஜகவிற்கு நினைவூட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னரே இந்த ஃபார்முலா குறித்து பேசிவிட்டதாகவும், வெளிப்படையான முறையில் இதுகுறித்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வோர்லி தொகுதியில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே, ஆட்சியில் சம பங்கு, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி போன்ற சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்க பா.ஜ.க. மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, அமைச்சரவை குறித்து தீபாவளிக்குப் பின்னர் முடிவெடுக்கலாம் என உத்தவ் தாக்கரேயிடம் அவர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், உத்தவ் தாக்கரேவின் மகனும், வொர்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என சிவசேனா கட்சியின் இளம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதுடன் தங்கள் கட்சிக்கு 105 உறுப்பினர்கள் இருப்பதாகவும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளதாகவும் பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
தீபாவளிக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் அமைச்சரவை குறித்து பேச்சு நடத்தி இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
