ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நபர்களுக்கு, ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் நடிகர் விஷால் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp us