பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடிய, அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழு, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்வது என முடிவு எடுத்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருதரப்பு வர்த்தகத்தையும் அந்நாடு நிறுத்திவைத்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 370ஆவது பிரிவு தொடர்பான நடவடிக்கைகள் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் இறையாண்மை சார்ந்தது என்றும், இதில் தலையிட நடைபெறும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் தற்காலிகமான ஒரு பிரிவின் காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது என்றும், இந்திய அரசும், நாடாளுமன்றமும் எடுத்த முடிவு, ஜம்மு-காஷ்மீருக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக எடுக்கப்பட்டதாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீரில் பாலின மற்றும் சமூக-பொருளாதார பாகுபாடுகள் அகற்றப்படும் என்றும் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு, அம்மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் அதிருப்தியை போக்க எடுக்கப்பட்டுள்ள, முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கையை, பாகிஸ்தான் எதிர்மறையாகப் புரிந்து கொண்டிருப்பதில் வியப்படைய எதுவுமில்லை என்றும், இத்தகைய போக்கிலிருந்தே எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அந்நாடு நியாயப்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நேற்று ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள நடவடிக்கைகள் தேவையற்றவை என்றும், இந்த முடிவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்வதோடு, தூதரகத் தொடர்புகளுக்கான வழக்கமான வழிமுறைகளை மீட்டமைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.