கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால், அணைக்கு வரும் மொத்த நீரும் காவிரியில் விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக வெள்ளிக்கிழமை இரவு வந்துசேரும்போது ஒகேனக்கல்லில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால், தட்சிண கன்னடா, குடகு, பெலஹாவி, உடுப்பி, சிமோகா, சிக்மகளூர், ஹாசன், ரெய்ச்சூர், உத்தரகன்னடா, தார்வாட் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தட்சிண கன்னடா, குடகு, பெலஹாவி, தார்வாட் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெலஹாவி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா பார்வையிட்டார்.
பெலஹாவி மாவட்டத்தில் யமஹர்னி (yamagarni) பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி ஆறுபோல காட்சியளிப்பதால், உள்ளூரை சேர்ந்தவர்கள் அதில் குளித்து ஆட்டம் போட்டு வருகின்றனர்.
இடைவிடாத கனமழையால், மங்களூரு மார்க்கத்தில், ஸ்ரீபாகிலு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அவ்வழியே ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைகள் சேதமடைந்துள்ளதால், மங்களூரில் இருந்து மகாராஷ்டிரா பகுதிகளுக்கு கர்நாடக அரசுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை-வெள்ளத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
124 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக உள்ளது. ஹேமாவதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை முழுகொள்ளளவை எட்டிய பிறகு, அங்கிருந்து காவிரியில் நீர் திறக்கப்பட உள்ளது.
அதேசமயம், 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வரும் மொத்த நீரும், விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கபினியில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக, வெள்ளிக்கிழமை இரவு ஒகேனக்கல் காவிரியில் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஒகேனக்கல்லில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.