சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
மெரினா, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், பெசன்ட் நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்தது.
தேனி மாவட்டம் போடி அதன் சுற்றுப்பகுதிகளான மீனாட்சிபுரம், முந்தல், தேவாரம், துரைராஜபுரம், ராசிங்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நேற்று மாலை சாரல் மழையாகத் தொடங்கி இரவில் கனமழை பெய்தது. சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது
திண்டுக்கல் நகர் மற்றும் கிராமப்புறங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளான சீலப்பாடி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. கடம்பூர் மலைப்பகுதியிக்கு கெம்பநாயக்கன் பாளையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக கடம்பூர் மலைப்பாதையில் தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் இயல்பு அளவில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழகத்தை ஒட்டிய கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
