சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது கணக்கில் வராத எட்டரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
மேலும், கருப்புப் பணத்தை ஹவாலா பரிமாற்றம் மூலம், வெள்ளையாக மாற்றி டெல்லியில் 3 வீடுகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதில், சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வருமான வரித்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து சிவக்குமார் சிங்கப்பூர் சென்றதற்கும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 30ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜரான சிவக்குமாரை, தொடர் விசாரணைக்குப் பிறகு 3ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை கைது செய்தது.
அன்று தொடங்கி தற்போது வரை சிவக்குமாரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை செவ்வாய் கிழமை அன்று சம்மன் அனுப்பியது.
வியாழக்கிழமை அன்று டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ஆஜரானார்.
அதேநேரத்தில் சிவக்குமாரும் அங்கு அழைத்து வரப்பட்டார். இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டில் தந்தையுடன் சேர்ந்து சிங்கப்பூர் சென்றதற்கான காரணங்கள் குறித்த ஆவணங்களை ஐஸ்வர்யா தாக்கல் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
WhatsApp us