பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகவும் நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசிடம் இருந்து குடிமராமத்து பணிக்காக அதிக நிதியை பெற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பேசிய அவர், கிராமத்தலைவர்கள் மற்றும் அங்குள்ள விவசாயிகளை வைத்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நிலத்தடி நீரை பாதுகாக்க திமுக ஆட்சிக்காலத்தை விட அதிமுக ஆட்சிக்காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், நீர் மேலாண்மைக்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அதனை கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், 85 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 100 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். குடிமராமத்து பணி சிறப்பாக நடைபெற்று வருவதால் அதனை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு ஆயிரத்து 829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற இருப்பதாகவும் அதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருமேனி-நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக இடம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது, இப்பணிகள் முடிவுற்ற பிறகு திட்டம் துவங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
WhatsApp us