தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற தனி சிறப்பு பிரிவு தொடங்க உள்ளதாகவும் பேரவையில் அவர் அறிவித்துள்ளார்.
பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தகவல் தொழில் நுட்பவியல்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தனியார் நில உரிமையாளர்கள்-தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வலைதளம் உருவாக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கான “தொழில் தோழன்” என்ற ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
சிப்காட் வல்லம் – வடகால் மற்றும் இராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சிப்காட் சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும் வகையில், வணிக வசதிகள் மையம் ஒன்று 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50,000 சதுரடி பரப்பளவில் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
கோயம்புத்தூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இடத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்காவில், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை பெருக்க வழங்கப்பட்டு வரும் மானிய உச்சவரம்பு, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கயிறு சங்கங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இயங்கும் பொருட்டு, மேற்படி கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2.33 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன் காஞ்சிபுரம் மாவட்டம் – பெரும்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் – செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 26 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
WhatsApp us