ஆசிரியர் தகுதி தேர்வில் நோட்டா மற்றும் ஜிஎஸ்.டி குறித்து எழுப்பபட்ட வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறியுள்ளனர். தங்கள் மதிப்பெண் குறைய பாடத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளே காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 9 மற்றும் 10 ந்தேதி நடைபெற்றது. 1,084 தேர்வு மையங்களில் நடந்த இத்தேர்வுக்காக 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த நிலையில் 150 மதிப்பெண்ணுக்கு முதல் தாள் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு தமிழ்மொழி மட்டுமே எளிதாக இருந்ததாகவும், கணிதம் மற்றும் கல்விசார் உளவியல் தொடர்பாக கேள்விகள் கடும் சவாலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வரலாறு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் ஆசிரியர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நோட்டா எத்தனையாவது நாடாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது? இந்தியாவில் ஜி.எஸ்.டி எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது? என்பன உள்ளிட்ட பாடதிட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி கொடுத்ததாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தேர்தல் எந்த ஆண்டு நடந்தது ? என்ற கேள்விக்கு விடை காண இயலாமல் விழித்த ஆசிரியர்களுக்கு, இந்திய அரசியல் சட்டத்தில் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது ? போன்ற பொது அறிவு கேள்விகளால் ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் திணறிப்போனதாக வேதனை தெரிவித்தனர்.
ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வு எழுதிய 80 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளி ஆசிரியர் பணி எட்டாக்கனியாகி இருக்கும் நிலையில் தற்போது தேர்வு எழுதியவர்களில் அரசு பள்ளி ஆசிரியர் பணி கிடைக்குமா என்பதே தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
WhatsApp us