புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் திரும்புவதற்கும் பிரதமர் மோடி ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆண்டு பதவியேற்ற சமயத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததையும், வறுமை, கல்வியறிவின்மையை அகற்ற இணைந்து பாடுபடுவோம் என்று தாம் அவரிடம் கூறியதையும் குறிப்பிட்டார். பத்தானிய இனக்குழுவை சேர்ந்தவன் என்ற வகையில், வாக்கு கொடுத்தால் அதை உறுதிபடக் காப்பாற்றுவேன் என இம்ரான்கான் தம்மிடம் கூறியதாகவும், அப்படி காப்பாற்றுகிறாரா என்று சோதித்தறியும் தருணம் இது என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க மறுப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2015ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடியை தாம் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள இம்ரான்கான், வறுமை ஒழிப்பே முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தீவிரவாத சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான முயற்சிகளை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே, சமாதான முயற்சிகள் சீர்குலைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் சமாதானம் என்பது நழுவலாக இருப்பதாகவும், சமாதானத்திற்கும் பிரதமர் மோடி ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார். தாம் வாக்குத் தவறவில்லை என்றும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தக்க விவரங்களை வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இதனிடையே, ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று இம்ரான்கான் கூறுவது நொண்டிச் சாக்கு என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது என்பதும், மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதும் உலகறிந்த உண்மை என்றும் குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.
