சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தில் தான் நல்லிணக்கம் நீடிக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 3 ஆயிரத்து 382 கோடி ரூபாய் மதிப்புடைய நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர், டீசல் லோகோ(loco) எஞ்சின் இரட்டை மின்மயமாக்கப்பட்ட சரக்கு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைக்கப்படும்.
இருமடங்கு வேகத்தில் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். இது மட்டுமின்றி நேற்று பக்தி இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய துறவி ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு ரவிதாஸ் ஜன்ம பூமியில் பிரதமர் மோடி மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் சாதி ரீதியான வேறுபாடுகள் இருக்கும் வரை சமூக நல்லிணக்கம் சாத்தியமே இல்லை என்று தெரிவித்தார். ரவிதாசின் வழிகாட்டல்படி தமது அரசு 5 அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
கல்வி, வருமானம், மருத்துவம், விவசாயம் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் களைதல் ஆகியவற்றை பிரதானமாக கொண்டு தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நேர்மைதான் மகிழ்ச்சிக்கான பாதை என்று கூறிய பிரதமர் பினாமி மற்றும் கருப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக தமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவரித்தார்.
இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை வாரணாசியின் மைந்தர் என்று புகழாரம் சூட்டினார்.
