பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த இந்த ஆலோசனையில், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் காஷ்மீர் தீவிரவாதிகள் ஊடுருவல், பாதுகாப்பு நிலவரம், அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமித் ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இதில் காஷ்மீர் தொடர்பான ஆலோசனைக்குப் பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WhatsApp us