சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சுமார் 2300 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் 2602 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் அத்திவரத விநாயகர், சங்கு விநாயகர், ராணுவ விநாயகர் என பல்வேறு வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 3 நாட்கள் வழிபாட்டுக்குப் பின் கடந்த 5-ஆம் தேதியும் நேற்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று நடைபெறும் விநாயகர் ஊர்வலங்கள் மூலம் சுமார் 2300 சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு கடல் பகுதிகளில் கரைக்கப்படுகின்றன. சென்னை பட்டினப்பாக்கத்தில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
பட்டினப்பாக்கத்தில் 1600 சிலைகள் கரைக்கப்படுகின்றன. முதற்கட்டமாக 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தேவைக்கேற்ப போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினப்பக்கம் தவிர நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை மற்றும் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனம் அருகே என 6 இடங்களில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
சிலைகளை கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கமாண்டோ மற்றும் சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிலைகள் கரைக்கும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ரசாயனம் கலந்த சிலைகளை கரைக்கக் கூடாது, போலீசாரிடம் அனுமதி பெற்று டோக்கன் பெற்றுத் தான் சிலைகளை கரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
WhatsApp us