ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத் தலத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 பணியாளர்கள் உள்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் படகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறிய படகு கச்சுலுரு என்ற இடத்தில் திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றினர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதற்கிடையே, இந்த விபத்தில் பலியான மேலும் 16 உடல்களை மீட்புக்குழுவினர் நேற்று முன்தினம் மீட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய படகு ஆற்றுக்குள் 210 அடி ஆழத்தில் இருப்பதை உத்தரகாண்ட் மற்றும் மும்பையில் இருந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் மேலும் 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 13 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
WhatsApp us