நடப்பு ஆண்டில், 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, மீன் வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும். 100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆற்காட்டுத்துறையில் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்திலுள்ள பெரியதாழையில், அலை தடுப்புச்சுவர் கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறைகளுடன் கூடிய ஒரு புதிய “மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்” காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
WhatsApp us