தமிழ்

டெல்லி – காஷ்மீர் இடையே அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காத்ராவையும் (katra), டெல்லியையும் இணைக்கும்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது காஷ்மீரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோவிலையும், டெல்லியையும் இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், இணை அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பச்சை வண்ண கொடியை அசைத்து ரயிலின் சேவையை அவர்கள் தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமித் ஷா, சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றப் பாதையில் தடைகள் இருந்ததாகக் கூறினார். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் மாறப் போகிறது எனத் தெரிவித்த அமித் ஷா, வளர்ச்சிக்கான பயணம் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15க்குள்ளாக, கன்னியாகுமரியும், காஷ்மீரும் ரயில் மூலம் இணைக்கப்படும் என கூறினார்.

டெல்லி – காத்ரா இடையேயான, எஞ்சின் அற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையால், பயண நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணிநேரமாகக் குறையும். டெல்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில், பிற்பகல் 2 மணி அளவில் காத்ராவை அடையும்.

அங்கிருந்து 3 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில், 8 மணி நேரத்தில் டெல்லியை சென்றடையும். வர்த்தக ரீதியிலான பயணம் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆயிரத்து 630 ரூபாய் தொடங்கி 3 ஆயிரத்து 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களிலும் அந்த ரயில் இயங்கும். ஏசி வசதியுடன் கூடிய 16 பெட்டிகளை உடைய வந்தே பாரத் ரயிலில் கல்லடி பட்டாலும் உடையாத அளவுக்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. கால்நடைகள் மீது மோதினாலும் முகப்பு சேதம் அடையாத வண்ணம் பாதுகாக்கும் கவசமும் உள்ளது.

கதவை திறந்தால் தானாகவே மின்விளக்கு எரியும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் வந்தே பாரத்தில் உள்ளன. கோச்களுக்கிடையே எந்த தடுப்பும் கிடையாது. ஒரு கோச்சில் இருந்து மற்றொரு கோச்சுக்கு எளிதாக பயணிகள் சென்று வர முடியும்.

உணவுப் பண்டங்கள், சரக்குகளைக் கையாளும் அறைகள் ஒவ்வொரு கோச்சிலும் உள்ளன. வாக்யூம் மூலம் கழிவுகளை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையிலான கழிவறைக் கோப்பைகள், கை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய்கள், டிரையர் ஆகிய வசதிகளைக் கொண்டது வந்தே பாரத்.  எக்சிகியூட்டிவ் கோச்சில், 360 டிகிரி கோணத்தில் சுழலும் இருக்கை வசதி உண்டு.

இறங்க வேண்டிய நிலையம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் எல்.இ.டி திரையில், ரயிலின் வேகம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அனைத்து கோச்களிலும் சிசிடிவிக்கள் உள்ளன.

தானாகவே திறந்து மூடும் கதவுகளை, ரயில் காப்பாளர் இயக்குவார். அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இதில் இல்லை. அதற்கு மாற்றாக, ஒரு பொத்தானை அழுத்தினால், ரயில் காப்பாளர் தேடி வருவார்.

ரயிலை தூய்மை செய்வதற்கு செயற்கைப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் முதல் பசுமை ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது வந்தே பாரத். இவ்வளவு சிறப்பம்சங்களுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை, பெங்களூரு – ஐதராபாத், மும்பை – அகமதாபாத், கொல்கத்தா – பாட்னா வழித்தடங்களில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. 

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

520, Asmi Industrial Complex, Near Ram Mandir Railway Station, Goregaon West, 400104, Mumbai, Maharashtra.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us