பாற்கடலிலிருந்து பெறப்பட்ட அமுத கலசத்தை அசுரர்கள் கவர்ந்து சென்றார்கள். தீயவர்களின் கைகளில் அது சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்தால் தேவர்கள் அவர்களோடு போராடினர். 12 நாள்கள் (மானிடர்களுக்கு இது 12 ஆண்டுகள்) நடைபெற்ற போரில் அசுரர்கள் தோற்று தேவர்கள் வென்றனர். அமுத கலசத்தை திருமால் சுமந்து செல்கையில் அதில் இருந்த 4 துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன. அவை பிரயாக் எனும் அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் ஆகிய இடங்கள். இந்த இடங்களில் அமுதம் விழுந்த நாளில் கும்பமேளா விழா நடத்தப்படுகிறது.
அமுதம் சிந்திய இடங்களில் உள்ள நீர் நிலைகளில் அன்றைய நாளில் அமுதம் பொங்குவதாக ஐதிகம். அன்று நீராடுவது எல்லாவித பாவங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது. 12 கும்பமேளாவுக்குப் பிறகு, வருவது மகா கும்பமேளா விழா. இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
12 ஆண்டுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அதைப் போலவே அலகாபாத்தில் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும். அலகாபாத், ஹரித்துவார் இரண்டில் மட்டுமே இது நடைபெறும். அரை கும்பமேளா விழா 2019 ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய – மாநில அரசுகள் ஒதுக்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது என்றும் அறிவித்துள்ளது.
