இரு நாட்டு எல்லை தாண்டி செல்வதற்கான பாதைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. நவம்பர் 9ம் தேதி சீக்கிய குருவான குருநானக் தேவின் 550 வது பூரண பிரகாச ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி, இந்திய எல்லை வரையிலான பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
கர்த்தாபுர் வளாகத்தில் இந்திய சீக்கிய பக்தர்கள் 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு திடீரென அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் விசா அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைப்பது குறித்து இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதே போன்று எல்லைதாண்டி வரும் பக்தர்கள் பெயர்ப்பட்டியலை பத்து நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரச்சினைகளில் உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் வாகா எல்லையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.