டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
லாகூர்-அட்டாரி இடையே இயக்கப்படும் சம்ஜெளதா ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்ததை அடுத்து இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இணைப்பு ரயில்கள் மூலம் சம்ஜெளதா ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி டெல்லியிலிருந்து அட்டாரிக்கு இந்தியத் தரப்பிலும், லாகூரிலிருந்து அட்டாரிக்கு பாகிஸ்தான் தரப்பிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருநாட்டு பயணிகளும் அட்டாரி எல்லையில் அந்தந்த நாடுகளுக்கான இணைப்பு ரயில்களில் மாறி ஏறிக்கொள்வர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், கராச்சி – ஜோத்பூர் இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தார் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தொடர வேண்டும் என இருநாட்டு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
