பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீரில் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் உதாம்பூர், பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாலை பெருந்திரளாக மக்கள் சந்தைகளில் திரண்டனர். ஆடைகள் உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பொருட்களை அவர்கள் வாங்கிச் சென்றனர். ஒரு வார காலத்திற்குப் பின்னர் முழு அளவில் சந்தையில் வியாபாரம் களைகட்டியது.
தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உபயோகத்திற்காக 300 இடங்களில் பொது தொலைபேசி பூத்துகள் நிறுவப்பட்டுள்ளன.
கோதுமை, அரிசி,மண் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 35 முதல் 65 நாட்கள் வரை தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மாநில அரசின் உணவுப்பொருள் நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
ஆனால் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் பக்ரீத் நாளில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து ஸ்ரீநகரில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வீதிகளில் நடமாடிய மக்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டடனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு முழு அளவு சுதந்திரம் கொடுத்து உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும்படி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவச் செய்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மதக்கலவரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால், ,ஸ்ரீநகரின் ஜம்மா மஸ்ஜித் உள்ளிட்ட இரண்டு மிகப்பெரிய மசூதிகளில் இன்று வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு தவறான நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூதரக உறவுகள் மற்றும் ரயில் பேருந்து போக்குவரத்தை துண்டிப்பதால் இந்தியாவுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்தால் அதற்குரிய பதிலடியை அது சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள ஆளுநர், எல்லையளவு இந்த பிரச்சினை நின்றுவிடாது என்றும் பாகிஸ்தானின் உள்ளேயே போய் தக்க பாடம் புகட்டுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக் இந்திய ராணுவம் எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.