சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நாளை கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இதையொட்டி, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கமாண்டோ, ராணுவம், எஸ்பிஜி கமாண்டோ, டெல்லி போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் என டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவ படைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.
டெல்லியில் இரவுபகலாக வாகன சோதனையும், ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
டெல்லியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரை தலைநகரில் ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ராஜ்பவனில் ஆளுநர் சத்யபால் மாலிக் உயர் அதிகாரிகளுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். ஸ்ரீநகர் செங்கோட்டையில் இம்முறை மூவர்ணக் கொடியேற்றப்பட்டு உயரப் பறக்க உள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
உதாம்புர் மைதானத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சீருடை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
குஜராத்தில் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கடலோர காவல்படையினரும் போலீசாரும் கடற்கரையில் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில்களிலும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முப்படையினர், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், தேசிய மாணவர் படையினர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
