பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜய்குமார் என்பவர் கல்கி பகவான் என தன்னைத்தானே கூறிக் கொள்பவர். இவர் பல்வேறு தொழில்களில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கல்கி விஜய்குமாரின் ஒரே மகன் கிருஷ்ணா அமெரிக்காவில் பல்வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறையினர் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திரா மற்றும் சென்னையில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் ரொக்கமும், இந்திய ரூபாயில் 9 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
