900 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தி பதுக்கிய வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து சிலைகளைக் கொள்ளையடித்து வெளிநாட்டில் விற்பனை செய்த வழக்கில் கைதாகி கடந்த 2012ம் ஆண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர். 7 ஆண்டுகளாகியும் இன்னும் அவனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நாட்டு காவல் துறையினர் தொடர்ந்துள்ள வழக்கில், கபூரின் கூட்டாளிகள் சஞ்சீவி அசோகன், ரஞ்சித் கன்வர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்டுசாலமன், தீனதயாளன், வல்லபபிரகாஷ், நெயில, பெர்ரி ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 900 சிலை மற்றும் கலைப்பொருட்களை கடத்தி பதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவற்றின் சர்வதேச மதிப்பு 900 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இவர்களில் சஞ்சீவி, அசோகன், தீனதயாளன், சுபாஷ்கபூர் உள்ளிட்டோர் தமிழக சிறையில் உள்ளதால் அவர்களை இந்த வழக்கில் கைது செய்து நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமெரிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
