அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்ற 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்தும்,பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல் ஹோட்டல், விடுதிகளில் தினசரி வாடகை 1000 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது என்றும், ஆயிரத்து ஒரு ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 வரை வாடகை உள்ள ஹோட்டல், விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 7ஆயிரத்து 500 மேல் வாடகை உள்ள ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்த 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சமையலுக்கு பயன்படும் உலர்ந்த புளிகளுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படாத பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாகக் கூறிய மத்திய நிதியமைச்சர், ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் குளிர்பானங்கள், தேநீர் மற்றும் காபிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ரயில்வேக்கு சப்ளையாகும் சரக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியும் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நெசவு மற்றும் நெசவு அல்லாத பாலித்தீன் பைகளுக்கான வரி 12 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ள மத்திய நிதியமைச்சர், 10 முதல் 13 பேர் பயணிக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு ஒரு சதவீதமாகவும், டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இலை, தழைகள் மற்றும் சுற்றுச்சூழல் உகந்த பொருட்களால் தயாரான கோப்பைகள், தட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12 ல் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்ற அவர், புதிய ஜிஎஸ்டி கட்டணம் நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
