திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. 4வது நாள் நிகழ்வின் போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்குடன் மனம் உருகி சுவாமியை வேண்டி கொண்டனர்.
விழாவில் ஆந்திரா, தமிழகம், கொல்கத்தா, இமாச்சல பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகளும், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதற்கிடையில் புரட்டாசி மாதம் என்பதாலும் இன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் சனி, ஞாயிறு விடுமுறை வருவதாலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இதனால் தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 அறைகளும் நிரம்பி குளிர் காற்றுடன் கொட்டும் மழையில் நனைந்தபடி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதற்கிடையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.