ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவின் கண்ணவரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், நிவாரண முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உடனடியாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும், தரமான உணவு வழங்கவும் உத்தரவிட்டார்.
வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையும், சிறப்பு நிதியாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கவும் உத்தரவிட்டார். கடந்த ஆட்சியின் போது இயற்கைப் பேரிடர் காலங்களில் 50 சதவீத மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது விதைகளை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.
