காவல்துறையில் சிறப்பாக பணிபுரிவோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கி பேசினார். அப்போது அவர், காவல்துறையினரின் சிறப்பான பணியால் தமிழ்நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாக பாராட்டினார். பொருளாதார வளர்ச்சிக்கு அமைதி நிலவுவது அவசியம் என்றும், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியின் காரணமாகதான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலத்துக்கு வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களித்தனர்…
