சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்துள்ளது. வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 5 கட்டங்களாக புவி வட்டப் பாதையை கடந்து சென்ற இந்த விண்கலம் இன்று அதிகாலை 2.21 மணியளவில் நிலவை நோக்கி புறப்பட்டது.
வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவைச் சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். விக்ரம் எனப் பெயரிடப்பட்ட லேண்டர் நிலவில் இறங்கியதும் அதிலிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கிவிடும்.
அதில் பொருத்தப்பட்டுள்ள ரோவர், நிலவில் ஊர்ந்து சென்று அதன் தன்மையை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
