பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகளும், அந்நாட்டு ராணுவமும் இணைந்து அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கத் திட்டமிட்டிருப்பதாக கிடைத்த உளவுத் துறை தகவல்களை அடுத்து கடந்த சில நாட்களாக யாத்திரை பாதை நெடுகிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரையுடன் கூடிய கண்ணிவெடியும், குறிபார்த்து சுட உதவும் எம் 24 ரக அமெரிக்கன் ஸ்னிப்பர் ரைஃபிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் கண்ணி வெடி பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தக்கூடிய வகையை சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சோதனைகள் நடைபெற்றுவருகிறது. இதையடுத்தே காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் மற்றும் காவல்துறை கூட்டு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை வழிநெடுகிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரிகர்கள் அங்கு தங்கியிருக்கும் காலத்தை குறைத்துக் கொண்டு ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
WhatsApp us