பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவின் மிராஜ் வகை போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நேரத்தையும், இடத்தையும் இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார். இந்த நிலையில், இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் காஷ்மீரின் முஷாபராபாத் பகுதியில் இருந்து இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானை நோக்கி புறப்பட்டன.
12 மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு எவ்வித சிரமமும் இன்றி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பாலகோட் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்படும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்களை குறி வைத்து சுமார் 1000 கிலோ வரையிலான குண்டுகளை இந்திய போர் விமானங்கள் வீசியுள்ளனர்.
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் பல்லோட், சாகோட்டி, முசாபராபாத் இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு இந்திய விமானப்படை விமானங்கள் அனைத்தும் எவ்வித சிக்கலும் இன்றி மீண்டும் இந்தியாவிற்குள் வந்துவிட்டது. இந்த தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மோடியை சந்தித்து விளக்கி கூறியுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய போர் விமானங்கள் நுழைந்ததை அந்த நாட்டு ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இரவிலும் துல்லியாக இலக்கின் மீது வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை. ஏவுகணைகளையும் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவை.
எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய, தாக்குதலில், 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும், 5 நிமிட இடைவெளிகளில், அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதலில், மூன்று இடங்களிலும் பதுங்கியிருந்த, 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் மட்டுமின்றி, ஹிஸ்புல் முஜாஹூதீன் அமைப்பின் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
1971ஆம் ஆண்டு போருக்குப் பின் இந்திய விமானப் படை எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறை. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் கூட எல்லை தாண்டாமல் தான் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.
WhatsApp us