மும்பை: சிம்கார்டு மோசடி மூலம் ஒரு கும்பல், மும்பை தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடியை சுருட்டியுள்ளது. மும்பை மகிம் பகுதியை சேர்ந்த ஜவுளி அதிபர் ஒருவர் தனது வங்கி கணக்கின் விவரத்தை தனது செல்போனுடன் இணைத்திருந்தார். கடந்த மாதம் 27ம் தேதி இரவு 11 மணி முதல் 28ம் தேதி அதிகாலை 2 மணி வரை இரண்டு போன் எண்களில் இருந்து 6 மிஸ்டு கால்கள் வந்துள்ளன. அதன்பின் அவரது சிம்கார்டு செயல் இழந்துள்ளது.அவர் உடனடியாக தனது செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். உங்கள் பெயரில் புதிய சிம்கார்டு கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டதால், உங்கள் சிம் கார்டு செயல்இழக்கம் செய்யப்பட்டதாக செல்போன் நிறுவனம் தெரிவித்தது.
ஏதோ மோசடி நடந்துள்ளது என்பதை அறிந்த தொழிலதிபர் உடனடியாக தனது வங்கிக்கு சென்று வங்கி கணக்கை சரிபார்த்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடி ரூபாய் நெட் பேங்கிங் மூலமாக 24 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது தெரிந்தது. வங்கி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரூ.20 லட்சத்தை திரும்ப பெற்றனர். பணம் மாற்றம் செய்யப்பட்ட சில வங்கி கணக்குகள் அவர்கள் முடக்கினர். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர். தொழிலதிபர் சிம் கார்டின் பிரத்யேக எண்-ஐ எப்படியோ தெரிந்து கொண்ட ஹேக்கர்கள், மாற்று சிம் பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
