கர்நாடக அணைகளில் இருந்து மொத்தமாக நொடிக்கு 26 ஆயிரத்து 875 கன அடி வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவை வந்தடையும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13ஆம் தேதி முதல் நொடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 112.49 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பானது 81.99 டி.எம்.சி.யாக இருக்கிறது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை, திருச்சி முக்கொம்பு அணையைக் கடந்து நேற்று தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்தது.
இந்த நிலையில், இன்று கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ். மணியன், சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராசன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். வெளியேற்றப்பட்ட நீரில் மலர் மற்றும் நெல் மணிகளை தூவி அவர்கள் வரவேற்றனர்.
காவிரி, வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் தலா ஆயிரம் கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நீர் திறப்பு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீரால், 12 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
