20 டன் அளவிற்கு போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P. Morgan Asset Management), உலகிலேயே 2வது பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த எம்எஸ்சி கயான் என்ற சரக்குக் கப்பல் கடந்த ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது.
10 ஆயிரம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தக் கப்பல் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் ஃபிலடெல்பியா துறைமுகத்திற்கு வந்தது. எம்.எஸ்.சி. கயான் கப்பலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதில் சுமார் 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு போதைப் பொருள் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது கடந்த 230 ஆண்டுகளில் இதுவே முதன்முறை என்கின்றனர் அமெரிக்க சுங்கத்துறையினர்.
முன்னதாக இந்தக் கப்பல் பஹாமாஸில் இருந்தும், சிலியிலிருந்தும் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நேவார்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்எஸ்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கார்லோட்டா என்ற கப்பலில் இருந்து ஒன்றரை டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியதரைக்கடல் நாடுகள் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக குறிப்பிட்ட அமெரிக்க அதிகாரிகள், அப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
