ஆங்கிலேயர்களால் இந்தியாவில் புகுத்தப்பட்ட தாவரங்களில் ஒன்றான இந்த யூகலிப்டஸ் எனப்படும் தைல மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவாகும்.
முதலில் எரிபொருளுக்காக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைகளுக்கும், காகிதம் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்காகவும் தைல மரங்கள் விரும்பிப் பயிரிடப்பட்டன.
வறண்ட சமவெளிப்பகுதிகளில் பயிரிட ஏற்ற இந்த தைல மரங்கள், 8 மணி நேரத்துக்குத் தேவையான நீரை உறிஞ்சி ஆவியாக்குகின்றன. மண்ணின் சத்துகளையும் நிலத்தடி நீரையும் நன்றாக உறிஞ்சி வளரும் தன்மை கொண்டவை தைல மரங்கள்.
இதனால் காலப்போக்கில் நிலத்தடி நீர் கணிசமாக பாதிப்படைவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இந்தத் தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், விவசாயம் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறுகின்றனர்.
எனவே தைல மர வளர்ப்பை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
