விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழலையர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவுள்ள பெற்றோர்கள், குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். சுவாமி தரிசனத்துக்கு பின்னர் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்த பெற்றோர்கள், குருக்கள் முன்பாக ஓம் என்ற மந்திரத்தை நாவில் எழுதியும், அரிசியில் அ என்ற எழுத்தை எழுத வைக்கவும் செய்தனர். தொடர்ந்து ஆரம்ப பள்ளியில் சேர்க்க குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
விஜயதசமி தினத்தன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்காக திறந்து வைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை மாதிரிப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கென வந்திருந்த பெற்றோர், குழந்தைகளுக்கு அரிசியில் அ, ஆ உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொடுத்து, பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குழந்தைகளை சேர்த்தனர். புதிதாக பள்ளி வந்த குழந்தைகளுக்கு இனிப்பு, பொம்மைகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகா சரஸ்வதி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான விஜயதசமியை ஒட்டி, வித்யாரம்பம் விழா விமரிசையாக நடைபெற்றது. பள்ளியில் சேர்க்கவுள்ள தங்களது குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள், சிலேட், நோட்டு, எழுதும் உபகரணங்களை வைத்து சரஸ்வதி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு படைத்த தேனை குழந்தைகளின் நாவில் வைத்து, அவர்களை ‘ஓம்’ என்று சொல்லவும், நெல்லில் ‘அ’என எழுதவும் சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வனமாலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற குழந்தைகளின் நாவில், பூசாரிகள் மற்றும் கோவில் மேல்சாந்திகள் தங்க ஊசிகளை கொண்டு ‘ ஓம்’ என எழுதியும், அரிசியில் அ, அம்மா, அப்பா என எழுதவைத்தும் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதேபோல் தமிழக- கேரளா எல்லை பகுதியில் உள்ள பாரதீய வித்தியா பீடம் பள்ளியிலும் வித்தியாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவை
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில், விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெற்றோர் அழைத்து வந்த அவர்களது குழந்தைகளின் நாவில் தேன் தடவி ‘ஓம்’ என்ற வார்த்தை எழுதப்பட்டது. அதனைத்தொடர்ந்து, குழந்தைகளை மடியில் அமர்த்தி பச்சரிசியில் மஞ்சள் துண்டுகளை கையில் பிடித்து ஹரி ஸ்ரீ என எழுதும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மட்டுமல்லாது கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில், விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்த பெற்றோர், அங்குள்ள தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து, அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் தொடர்ந்து சேர்த்து வருகின்றனர். அதன்படி பெற்றோர் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, பள்ளிக்கு தேவையான, நோட்டு, புத்தகம், நாற்காலி உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். பின்னர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் குழந்தைகள் அ எழுத கற்றுக்கொடுக்கப்பட்டது.
