காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 119.330 அடியை எட்டியது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக எட்டியுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இதனால், காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களிலும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
