பிரதமர் மோடி பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டு இருந்த எதிர்கட்சிகள், உதிரி கட்சிகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர வைத்து உள்ளார். இவர்களை பார்த்து மோடி பயந்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மோடியை பார்த்து எப்படி பயந்து போய் உள்ளார்கள் என்பதை கொல்கத்தாவில் உள்ள மேடை காண்பிக்கிறது.
தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என்று சொன்னவர் .அவரை பெங்காலி மொழியை பேச வைத்து உள்ளார் மோடி. பெரியாரை பற்றி பேசியவர் விவேகானந்தர் பற்றி பேசியுள்ளார். மாநில சுயாட்சி பற்றி பேசி ஸ்டாலின் ஒன்றுப்பட்ட இந்தியா என்று பேச வைத்தது தான் மோடியின் சாதனையாகும்.
ஒன்றுப்பட்ட இந்தியாவை கொண்டு வருவதாக கூறும் மகா கூட்டணி உருபெறமுடியாத கூட்டணியாகும். இந்த கூட்டணி கருவிலேயே கலைய உள்ளது. மோடியை எதிர்த்து கூட்டம் நடத்துபவர்களிடம் யார் பிரதமர் என்பதை கேட்டால் ஒற்றுமை வராது. இப்போதே பிரதமரை காட்ட முடியாவிட்டால் தேர்தல் முடிந்த பின் எப்படி காட்டமுடியும்?
இந்த உதிரி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும் ஒவ்வொருவர் மனதிலும் தான் பிரதமர் என்ற எண்ணம் வரும்போது முழுமையாக இல்லாமல் கூட்டணி உருகுலைந்து போகும். இந்த கூட்டணியை எதிர்க்க எங்களுக்கு தெம்பு, திராணி இருக்கிறது. மோடி பலம் வாய்ந்த தலைவர். இவரை எதிர்த்து கூடுகின்றவர்களின் பயம்.
தம்பிதுரையின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். அவர் எப்படி துணை சபாநாயகர் ஆனார். அவர் பேசுவதற்கு எப்படி சுதந்திரம் பெற்று உள்ளார் என்பதை புரிந்து கொள்ளட்டும். தம்பிதுரை கருத்து கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது. அதனால் அந்த கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை.
ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. தேர்தல் நேரங்களில் திமுக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது கிடையாது. மோடி எந்த இடத்திலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொல்லவில்லை. பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை எடுத்து வந்து மக்களுக்கு ரூ.15 லட்சம் பெரும் அளவிற்கு திட்டங்கள் தரப்படும் என்றார். அதில் ரூ.5 லட்சம் திட்டத்தை மக்களுக்கு தந்துவிட்டார். ஒரு குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டமாக தந்து உள்ளார்.
வரும் பட்ஜெட்டில் நல்ல திட்டங்கள் வரும். ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்த திமுகவிற்கு நேர்மையாளரான மோடி பற்றி மேற்கு வங்காளத்தில் பேச உரிமை இல்லை. மேற்கு வங்காளத்தில் பெங்காலியில் வணக்கம் சொன்ன ஸ்டாலின் மத்திய பிரதேசத்தில் கூட்டம் நடந்தால் இந்தியில் பேசுவாரா?
மகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். நீங்களா நாங்களா என்று பார்த்து விடுவோம்.பிரதமர் வேட்பாளராக முன்மொழித்த ராகுலை அழைத்து செல்லாதது ஏன். கேலிக்கூத்தான கூட்டணியை வேடிக்கை பார்க்கிறோம்.
