பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பெரியளவில் தாக்குதல் நடத்த லக்ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானை மையமாக கொண்ட லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த புதிய இலக்குகளை ஆய்வு செய்து வருகின்றது என மத்திய புலானய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரணசிக்கு பயணித்ததாகவும், அங்கு தங்கள் தளத்தினை நிறுவி, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சத்தயக்கூறுகளை ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமர் மாட்னி என்ற தீவிரவாதியும், நேபாளத்தை சேர்ந்த தீவிரவாதியும் கடந்த மே மாதம் வாரணாசியில் 7 முதல் 11ஆம் தேதி வரை தங்கி, அங்கு தாக்குதல் நடத்த செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அமைப்பில் ஆட்களை சேர்த்து வரும் உமர் மாட்னி, பல இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு எந்த தாக்குதலும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
